×

மங்கலம் அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரனை பராசக்தி வதம் செய்ய எடுத்த கோலம் மகிஷாசுரமர்த்தினி எனப்படுகிறது. விஜயன் எனும் அர்ஜுனன் இந்த அம்பிகையை நோக்கி தவமிருந்துதான் போரின் வெற்றிக்கு வழிதேடிக் கொண்டான். அன்னை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தை பல்வேறு தலங்களில் தரிசிக்கலாம். ஆனால் பெரும் நிதியாக தானே பூமிக்குள் புதையுண்டு கிடந்து, திடீரென ஒரு நாள் பக்தர்கள் நலம் பெற பொக்கிஷமாக கிடைத்தவள்தான் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி. மத்தூர் எல்லையில் 1934ம் வருடம் அரக்கோணம்&ரேணிகுண்டா இரண்டாவது ரயில்பாதை பணி நடைபெற்றது. அப்போது சக்திமேடு என்ற இடத்தில் வேலையாட்கள் கடப்பாறையால் பள்ளம் தோண்டினர். அந்த சமயத்தில் டங் டங் என்ற சத்தம் கேட்டது. அந்த வேலையாட்கள் மயங்கி விழுந்தனர்.

சத்தம் கேட்ட இடத்தில் மண்ணை அகற்றி பார்த்தபோது அதியற்புதமான அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினியின் திருவுருவச் சிலை கிடைத்தது. மண்ணில் கிடந்தாலும் அன்னையின் கம்பீர உருவம் எந்த சிதைவுமின்றி மீட்டெடுக்கப்பட்டது. சிலை பல ஆண்டுகளாக பூமிக்குள் கிடந்தபோது, அப்பகுதி சக்திமேடு என பெயர் பெற்று விளங்கியிருப்பது ஆச்சரியமான விஷயம். எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் எனும் அசுரன் கடுந்தவம் செய்து கன்னிப் பெண்ணை தவிர தனக்கு வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். அந்த ஆணவத்தில் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும் முனிவர்களும் பராசக்தியை பணிந்து மகிஷாசுரனை அழிக்குமாறு வேண்டினார்கள்.

அவர்களின் கோரிக்கையை உடனே ஏற்றாள் பராசக்தி. அழகிய கன்னிகையாக உருவெடுத்தாள். தன்னை அழிக்க வந்தவளே இவள்தான் என்று அறியாத மகிஷன் அவளது அழகில் மயங்கி, தன்னை திருமணம் புரியும்படி வேண்டினான். அம்பிகை மறுக்கவே அவளோடு போர் புரியத் துவங்கினான். உலக நாயகியான தேவி எட்டுக்கரங்கள் உடைய துர்க்கையாக விஸ்வரூபம் எடுத்து மகிஷனை வதம் செய்தாள். உயிர் பிரியும் நேரத்தில் தன் தவறை உணர்ந்தான் மகிஷன். அன்னையின் திருவடிகளில் சரண் புகுந்தான். அன்னை அவன் உடல்மீது ஏறி நின்று ஆனந்தத் தாண்டவம் ஆடினாள். இந்த அற்புதத் தோற்றமே மத்தூரில் அமைந்துள்ளது. ஏழடி உயரத்தில் எழிற் கோலத்தில் நிற்கும் மகிஷாசுரமர்த்தினியின் தரிசனம் கண்களை பனிக்கச் செய்கிறது. எட்டு திருக்கரங்களிலும் ஆயுதங்கள் தரித்திருந்தாலும் அவள் திருமுகமண்டலம் சாந்தமே உருவாய் திகழ்கிறது.

அகத்தியர், கௌசிகர் போன்ற மாபெரும் முனிவர்களால் எழுதப்பெற்ற ஓலைச்சுவடிகளில் மகிஷாசுரமர்த்தினியின் மகாத்மியம் விளக்கப்பட்டிருக்கிறது. அன்னையின் அருளால் தம் துன்பங்களிலிருந்து விடுபட்ட பக்தர்கள் அம்பிகைக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்கள் பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தலத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு 108 பால்குட அபிஷேகமும், பௌர்ணமி நாட்களில் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நவ கலச பூஜைகளும் 108 சங்காபிஷேகமும் நடைபெறுகின்றன. மன நோய்களை தீர்ப்பதில் இத்தேவி நிகரற்று விளங்குகின்றாள். பௌர்ணமி நாட்களில் சிறப்பு பேருந்துகள் திருத்தணியிலிருந்து இயக்கப்படுகின்றன. திருத்தணி-திருப்பதி சாலையில் திருத்தணியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் பொன்பாடி ரயில் நிலையத்திற்கு மேற்கே 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த தலம்.

Tags : Mangalam Arulwal Mahishasumartini ,
× RELATED திருவண்புருஷோத்தமம் புருஷோத்தம பெருமாள்